நீதிபதிக்கே மரண பயம் காட்டிய ரவுடி! சிறையில் மர்ம மரணம்! – கொலையா? தற்கொலையா? கதறும் மனைவி!
மதுரை நீதிமன்றத்தில் நீதிபதியையே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி பிரசாந்த், கடலூர் மத்திய சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு வில்லாபுரம் அருகே 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ரவுடி வெள்ளை காளியின் உறவினரான பிரசாந்த், அவரது சகோதரர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி, “வெளியே வந்ததும் உன்னைத் தீர்த்துக்கட்டுவேன்” என ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்தது தமிழகத்தையே அதிர வைத்தது.
நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இவர்கள் மீது தனி வழக்கு பதியப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக சகோதரர்கள் இருவரும் பிரிக்கப்பட்டு, ஜாக்கி என்ற பிரசாந்த் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள அறையில் அவர் தனது லுங்கியால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகச் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், பிரசாந்தின் மனைவி கனி இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார். “எனது கணவர் எதற்கும் அஞ்சாதவர், அவர் தூக்குப் போட்டுக் கொள்ளும் அளவுக்குக் கோழை கிடையாது. சிறையில் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். போலீசாரே அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடுகிறார்கள்” என அவர் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி தன்னிடம் வீடியோ காலில் பேசியபோது பிரசாந்த் உற்சாகமாக இருந்ததாகவும், திடீரென தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் கனி கூறுகிறார். நீதிமன்றத்தில் நீதிபதியுடன் தகராறு செய்த காரணத்திற்காகவே தனது கணவரைத் திட்டமிட்டுத் துன்புறுத்திக் கொன்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
பிரசாந்த் மீது கொலை, கொலை முயற்சி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரையில் கத்தியைக் காட்டி வலம் வந்த ஒரு ரவுடி, கடைசியில் நீதிபதிக்கே சவால் விட்டுவிட்டு, இப்போது சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மதுரை மற்றும் கடலூர் பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், பிரசாந்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறைத் துறை உயரதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு கைதி சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டது சிறைப் பாதுகாப்பின் ஓட்டைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மறுபுறம், நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த கைதி உயிரிழந்திருப்பதால், இந்த மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த தெளிவான உண்மை தெரியவரும்.
பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை வெளுத்து வாங்கிய சிங்கப்பெண்!

