India vs Pakistan Cricket Match: இந்த பேட்டிங்கை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு சவால் விடுகிறீர்களா? பாக். அணியின் பரிதாப நிலை!
“எந்த அணிக்கும் நாங்கள் சவால் விடுப்போம்” என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அந்த அணியின் பேட்டிங், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் படுதோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக ஆமை வேகத்தில் விளையாடிய பாகிஸ்தான், அமீரகத்திற்கு எதிராகவும் ரன்கள் எடுக்கத் திணறி விக்கெட்டுகளை இழந்தது.
ஓமன் மற்றும் அமீரகம் போன்ற அனுபவமற்ற அணிகளை வீழ்த்தி மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது, பாகிஸ்தான் அணிக்கு பலமான அடித்தளமாக அமையவில்லை. பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த இந்த வெற்றி, ஷஹீன் அஃப்ரிடி போன்ற பந்துவீச்சாளரை மட்டுமே நம்பி இருக்கிறது என்ற கசப்பான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
பலவீனமான பேட்டிங் வரிசை
போட்டிக்கு வெளியே நடைபெற்ற சர்ச்சைகளை ஒதுக்கி வைத்துப் பார்த்தாலும், களத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அமீரகத்திற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான், 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே சரிவைச் சந்தித்தது.
பாகிஸ்தானின் அடுத்த பெரிய பேட்டிங் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட சயிம் அயூப், இந்தத் தொடரில் தனது மூன்றாவது ‘டக் அவுட்’டைப் பதிவு செய்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாஹிப்சாதா ஃபர்ஹான், 12 பந்துகளைச் சந்தித்து வெறும் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அனுபவ வீரர் ஃபக்கர் ஜமான் (36 பந்துகளில் 50) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி (14 பந்துகளில் 29) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இல்லையென்றால், பாகிஸ்தான் அணி 100 ரன்களை எட்டுவதே கடினமாகியிருக்கும்.

ஃபக்கர் ஜமானின் அரைசதத்திற்குப் பிறகு, 86/3 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான், 110/7 என சரிந்து, மீண்டும் ஒருமுறை தங்கள் மிடில் ஆர்டர் எவ்வளவு பலவீனமானது என்பதை நிரூபித்தது.
பந்துவீச்சாளர் பேட்ஸ்மேன்களை விட சிறப்பாகச் செயல்பட்டார்
பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் புள்ளிவிவரம் என்னவென்றால், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடிதான், பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். இந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அடித்த 15 சிக்ஸர்களில், 6 சிக்ஸர்களை ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே அடித்துள்ளார்.
அந்த அணியிலேயே அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டையும் (206.45) அவர்தான் வைத்துள்ளார். மிக முக்கியமாக, சயிம் அயூப், கேப்டன் சல்மான் அகா, ஹசன் நவாஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகிய நான்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் சேர்ந்து அடித்த மொத்த ரன்களை (63) விட, ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே தனியாக 64 ரன்கள் குவித்துள்ளார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர், அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்றால், அந்த அணியின் பேட்டிங் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஒரு சிறிய அணியிடமே இந்த நிலைமை என்றால், இந்தியாவின் பலம் வாய்ந்த பந்துவீச்சுக்கு முன்னால் இந்த பேட்டிங் வரிசை என்னவாகும்?
இந்த நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் மீண்டும் ஒரு படுதோல்வியை சந்திக்கும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
