ஈரான் பற்றி எரிகிறது! ஈரான் நாடு தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரத்தைச் சந்தித்து வருகிறது. பொருளாதார வீழ்ச்சி, விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு மற்றும் அடிப்படை உரிமைகள் மறுப்பு போன்ற காரணங்களால் வீதியில் இறங்கிய மக்கள், இப்போது அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் ஒரு சிறு புள்ளியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது நாட்டின் 31 மாகாணங்களுக்கும் பரவி காட்டுத்தீயாக எரிந்து கொண்டிருக்கிறது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், “சர்வாதிகாரமே ஒழிக” என முழக்கமிட்டு வருகின்றனர். அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளன. ஆங்காங்கே அரசு கட்டிடங்கள், பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஈரான் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
ஈரான் பற்றி எரிகிறது!
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதலில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இதுவரை 2,270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைத் தடுக்க, நாடு முழுவதும் இணையதளச் சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ‘நெட்ப்ளாக்ஸ்’ (NetBlocks) அமைப்பு, ஈரானில் இணையச் சேவை மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், ஈரானுக்குள் நடக்கும் வன்முறைகளின் உண்மையான நிலவரம் குறித்த அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. ஈரானில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க வன்முறையைக் கையாண்டால், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியை கொல்லவும் தயங்க மாட்டார் என்று அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், போராட்டக்காரர்களுக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், “அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காகப் போராட்டக்காரர்கள் தங்கள் சொந்த நாட்டின் தெருக்களை நாசமாக்குகிறார்கள். டிரம்ப் உதவி செய்வதாகச் சொல்வதை நம்ப வேண்டாம்; அவர் முதலில் தனது சொந்த நாட்டின் பிரச்சனைகளைக் கவனிக்கட்டும்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
இந்த உள்நாட்டுக் குழப்பம் ஈரானின் பொருளாதாரத்தை மேலும் அதலபாதாளத்திற்குத் தள்ளும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விலைவாசி உயர்வால் தவிக்கும் சாமானிய மக்கள், அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து வீதிகளில் போராடி வருவது ஈரானிய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
தற்போது ஈரானில் ராணுவம் மற்றும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் பெரிய அளவிலான மோதல் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. சர்வதேச நாடுகள் ஈரானின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வரும் நிலையில், காமேனி அரசு போராட்டத்தை எப்படி ஒடுக்கப் போகிறது என்பதை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! அதிர வைக்கும் பின்னணி!
