RCB Won Back to Back IPL Trophies: ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து ஆக்ரோஷமாகக் காத்திருந்த ஐபிஎல் 2026 (IPL 2026) டி20 கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற நாக்-அவுட் இறுதிப்போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்தி ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) ஆகிய மெகா அணிகளுக்கு பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற 3-வது அணி என்ற இமாலய பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த மெகா ஃபைனல் போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் சற்றும் யோசிக்காமல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
கில், சாய் சுதர்சன் அவுட்; ஆரம்பத்திலேயே குஜராத் டைட்டன்ஸை சுருட்டிய பெங்களூரு!
குஜராத் அணியின் பேட்டிங் தூண்களாகக் கருதப்பட்ட தமிழக இளம் புயல் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே மிக எளிதாக வீழ்த்தி அசுர ஆதிக்கம் செலுத்தினர்.
கேப்டன் சுப்மன் கில் வெறும் 10 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிதானம் காட்டிய சாய் சுதர்சன் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த நிசாந்த் சிந்து 20 ரன்கள் எடுத்த நிலையில் பவுண்டரியிலேயே கேட்ச் ஆனார்.
அதிரடி வெளிநாட்டு வீரர் ஜாஸ் பட்லர் ஆர்சிபி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 23 பந்துகளைச் சாப்பிட்டு வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தார்.
எனினும், இக்கட்டான சூழலில் களமிறங்கிய தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனி ஆளாகப் போராடி, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 37 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்து அசத்தினார்.
RCB Won Back to Back IPL Trophies; ஆர்சிபி-க்கு 156 ரன்கள் கச்சிதமான இலக்கு!
அடுத்து வந்த அர்சத் கான் 15 ரன்கள் எடுக்க, மற்ற கீழ்வரிசை வீரர்கள் யாரும் ஆர்சிபி அணியின் அக்மார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி பந்துவீச்சில் ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் என்ற எளிய இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அதிரடி வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரன் மெஷின் விராட் கோலி ஜோடி களம் புகுந்தது.

இந்த ஜோடி ஆரம்பம் முதலே அசுர வேகம் காட்ட, முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்ந்தது. அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிடில் ஆர்டர் சொதப்பல்; ஆர்சிபியைக் காப்பாற்றி 75 ரன்கள் விளாசிய கிங் கோலி!
இந்தத் தருணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் 15 ரன்களிலும், குருணல் பாண்டியா 1 ரன்னிலும் சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சியளித்ததால் ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது.
எனினும், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்ற அனுபவ சிங்கம் விராட் கோலி, தொடர்ந்து தனது மிரட்டலான அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
பவுண்டரி, சிக்ஸர் என மைதானத்தை அதிரவைத்த கோலி, வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்துத் தனது அதிவேக ஐபிஎல் அரை சதத்தைப் பதிவு செய்து உலக சாதனை படைத்தார். இதனால் ஆர்சிபி அணியின் வெற்றிப்பாதை எளிதானது.
டிம் டேவிட்டும் அவருக்கு நல்ல துணையாக நின்று 24 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் மாஸ் காட்டிய விராட் கோலி, 42 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆர்சிபியை அசாத்திய வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன் காரணமாக ஆர்சிபி அணி 18 ஓவர் முடிவிலேயே, 12 பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
கிங் கோலி 9000 ரன்கள்! – ஐபிஎல் வரலாற்றில் புதிய இமாலயச் சாதனை!

