Asia Cup 2025: கம்பீர் வந்ததில் இருந்து அர்ஷ்தீப் சிங் புறக்கணிப்பு! 100-வது விக்கெட் கனவை உடைத்ததா அணி நிர்வாகம்? அஸ்வின் சரமாரி தாக்குதல்!
2025 ஆசியக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக எளிதான வெற்றியைப் பெற்றது. ஆனால், அந்த வெற்றியை விட, இந்திய அணியின் பிளேயிங் 11 தேர்வுதான் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் முன்னணி டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவரான அர்ஷ்தீப் சிங், பிளேயிங் 11-ல் இருந்து திடீரென நீக்கப்பட்டது, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது யூடியூப் சேனலில், இந்த விவகாரம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Asia Cup 2025- அர்ஷ்தீப் சிங் ஏன் நீக்கப்பட்டார்?
அர்ஷ்தீப் சிங், வெறும் 63 டி20 போட்டிகளில் 13.23 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது, இந்தியாவிற்காக டி20 அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவரை முதலிடத்தில் நிறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கியிருந்தால், 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருப்பார். ஆனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி நிர்வாகம் அவரை பெஞ்சில் அமர வைத்து, அவருக்குப் பதிலாக சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கியது.
இந்திய அணியின் இந்த முடிவு முன்னாள் வீரரான அஸ்வினை மிகவும் அதிருப்தியடையச் செய்துள்ளது. தனது யூடியூப் சேனலில் போட்டி குறித்து ஆய்வு செய்த அவர், அர்ஷ்தீப் நீக்கம் குறித்து தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார். “அர்ஷ்தீப் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், இது ஒன்றும் புதிதல்ல. கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இது தொடர்ந்து நடந்து வருகிறது. அர்ஷ்தீப் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகவே தெரிகிறது” என்று அஸ்வின் நேரடியாக கம்பீர் மீது குற்றம் சாட்டினார்.
அஸ்வின் முன்வைக்கும் புள்ளிவிவரங்கள்
அஸ்வினின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், புள்ளிவிவரங்களும் அமைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டில், அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் பயணம் செய்திருந்தும், அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் அவர் இருந்தபோதிலும், அணியில் இல்லாத அன்ஷுல் கம்போஜ் வரவழைக்கப்பட்டு வாய்ப்பு பெற்றாரே தவிர, அர்ஷ்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அஸ்வின் மேலும் கூறுகையில், “ஒருவேளை துபாய் ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, அவர் சுழற்பந்து வீச்சாளர்களை முழுமையாக நம்பித்தான் களமிறங்கினார்” என்று கூறினார். இந்த கருத்தின் மூலம், அர்ஷ்தீப் சிங்கை விட சுழற்பந்து வீச்சாளர்களை நம்புவது கம்பீரின் உத்தி என்று அஸ்வின் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
ரிஸ்க் எடுக்கும் அணி நிர்வாகம்: அஸ்வின் எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் சிவம் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இந்த பந்துவீச்சு கலவை (Combination) மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“டி20 உலகக் கோப்பை வரை இதே போன்ற அணித் தேர்வு தொடரலாம். ஆனால், இந்த பந்துவீச்சு கலவை ஒரு பலமான அணிக்கு எதிராக நிச்சயம் வேலை செய்யாது. இது மிகவும் ரிஸ்க்கானது. அர்ஷ்தீப் ஒரு மிகப்பெரிய மேட்ச்-வின்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அவர் அபாரமாகப் பந்துவீசினார்.
அவரைப் போன்ற ஒரு வீரரை நீண்ட காலம் வெளியே அமர வைப்பது கடினம். துபே சில விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், இந்த பந்துவீச்சு கலவை மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை” என்று அஸ்வின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்திய அணி பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி என மூன்று பிரத்யேக பந்துவீச்சாளர்களையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே என மூன்று ஆல்-ரவுண்டர்களையும் களமிறக்கியது.
இந்த உத்தியின் காரணமாகவே, அர்ஷ்தீப் சிங்கின் இடம் நேரடியாக பறிக்கப்பட்டது. சிவம் துபே அந்தப் போட்டியில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சிறந்த டி20 பந்துவீச்சு திறனை நிரூபித்துள்ளார். இதன் காரணமாக, அர்ஷ்தீப் சிங் இன்னும் சில போட்டிகளுக்கு வெளியே அமர வேண்டியிருக்கும் என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.
