Chennai Woman Chain Snatching Gang: தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களுக்கே விபூதி அடிக்கும் “நயவஞ்சக நளினிகள்” என்ற பெண் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருடர்கள் என்றாலே ஆண்கள் தான் என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து, மிகவும் கண்ணியமான தோற்றத்தில் வரும் பெண்கள், சக பெண்களையே குறிவைத்துச் சீரழித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண இல்லத்தரசிகள் போலவும், மரியாதைக்குரிய அரசு ஊழியர்கள் அல்லது செவிலியர்கள் போலவும் வேடமிட்டு வரும் இவர்கள், பெண்களின் கவனத்தைத் திசைதிருப்பி நகைகளைச் சுருட்டி வருகின்றனர். குறிப்பாக, உணவுப் பொருட்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைப்பறிப்பில் ஈடுபடும் இவர்களது பாணி, தற்போது போலீசாருக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.
நர்ஸ் வேடத்தில் நயவஞ்சகம்: நான்சி நிஷாவின் அதிரடி கைவரிசை!
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய நான்சி நிஷா என்பவர், இந்த நயவஞ்சகப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். சக ஊழியரிடமே நகைப்பறிப்பில் ஈடுபட்டு ஏற்கனவே கைதான இவர், 5 பவுன் நகையைப் பறித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால், திருந்தியாரா என்றால் அதுதான் இல்லை. ஜாமீனில் வந்த இரண்டே வாரத்தில் மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
முன்னர் வேலை பார்த்த அதே மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த சுனதா என்ற நர்ஸிடம் மிக அன்பாகப் பழகியுள்ளார். நான்சி சிறைக்குச் சென்ற விவரம் தெரியாத சுனதா, பழைய நட்பு என்ற ரீதியில் அவரை நம்பி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வழியில், நான்சி தனது வீட்டிற்கு வருமாறு சுனதாவை வற்புறுத்தி அழைத்துச் சென்று, அங்கு ‘காளான் சூப்’ கொடுத்துள்ளார். அதில் யாருக்கும் தெரியாமல் மயக்க மருந்தைக் கலந்துள்ளார்.
அந்தச் சூப்பைக் குடித்த சிறிது நேரத்திலேயே சுனதா நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். உடனே அவரது 5 பவுன் தங்கச் சங்கிலியை நான்சி நைசாகப் பறித்துக்கொண்டார். பின்னர், சுனதா கண்விழித்தபோது தனக்கு எதுவுமே தெரியாதது போல நடித்த நான்சி, அவரை ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். தனது நகையை இழந்ததை அறிந்த சுனதா கொடுத்த புகாரின் பேரில், நான்சி நிஷா மீண்டும் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
Chennai Woman Chain Snatching Gang: விதவிதமான ஏமாற்று வேலைகள்! உஷார் பெண்களே!
சென்னையின் பல பகுதிகளில் இதே போன்ற பாணியில் நகைப்பறிப்புகள் அரங்கேறி வருகின்றன. திருவல்லிக்கேணியில் டெய்லர் வேலை செய்யும் சுஜாதா என்பவரிடம் நைசாகப் பேசி, ‘பால்கோவா’வில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 5 பவுன் நகையை ரவணம்மா என்ற பெண் பறித்துள்ளார். அதேபோல், அயனாவரத்தில் ‘பாயாசத்தில்’ மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறித்த சம்பவத்தில் ஒரு தாயும், மகளும் சேர்ந்து கைதாகியுள்ளனர்.

இவர்களின் ஏமாற்று பாணிகள் என்ன?
திசைதிருப்புதல்: சாலையில் தனியாக வரும் வயதான பெண்களிடம் அட்ரஸ் கேட்பது போல நடித்து அவர்களின் கவனத்தைச் சிதைப்பார்கள்.
குழந்தை சென்டிமென்ட்: கையில் குழந்தையை வைத்துக் கொண்டு உதவி கேட்பது போலவும், பசியாக இருப்பது போலவும் நடித்து அருகில் வந்து நகையைப் பறிக்கிறார்கள்.
பேருந்து & ரயில்கள்: கூட்ட நெரிசலைப் பயன்படுத்திச் சங்கிலியை அறுத்துவிட்டு, யாராவது பிடித்தால் “நானும் ஒரு பெண்தான், என் மேல் எப்படி சந்தேகம் வரலாம்?” எனச் சென்டிமென்டாகப் பேசித் தப்பி விடுகிறார்கள்.
போலீசாரின் முக்கிய அறிவுறுத்தல்கள்:
தற்போது வரை சென்னையில் 4 பெண் கொள்ளையர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து பிஸ்கட், பால்கோவா, பாயாசம், சூப் போன்ற தின்பண்டங்களை எக்காரணம் கொண்டும் வாங்கி உண்ண வேண்டாம். அதேபோல், அதிகாலையில் அல்லது நள்ளிரவில் தனியாகச் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகரப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
