Mayiladuthurai Gold Robbery: மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் மாயமான 17 வயது சிறுவனை, காவல்துறையினர் மூன்றே மணி நேரத்தில் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுஹாஷ் (48) என்பவர், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டேட் பேங்க் ரோடு பகுதியில் ‘ஸ்ரீ கிருஷ்ணா டெஸ்டிங் ஏஜென்சி’ என்ற பெயரில் நகை உருக்கும் தொழில் செய்து வருகிறார். பழைய நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றித் தருவது இவருடைய பிரதான தொழில்.
வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் விபரீதம்
தனது கடைக்கு உதவியாளராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை கடந்த வாரம் தான் சுஹாஷ் பணிக்குச் சேர்த்துள்ளார். சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அச்சிறுவன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் கடையில் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
மாலை நேரத்தில் சுஹாஷ் சுமார் ஒன்றரை கிலோ பழைய நகைகளை உருக்கி, அதனைத் தங்கக் கட்டியாக மாற்றியுள்ளார். அதன் எடையைச் சரிபார்ப்பதற்காக, கடையின் முன்பகுதிக்குச் சென்று எடை போட்டு வருமாறு அந்தச் சிறுவனிடம் தங்கக் கட்டியைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.
Mayiladuthurai Gold Robbery: தங்கத்துடன் எஸ்கேப் ஆன சிறுவன்
எடை போடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் கடைக்குள் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுஹாஷ் கடையின் முன்பகுதிக்கு வந்து பார்த்தபோது, சிறுவனைக் காணவில்லை. கையில் கிடைத்த ரூ.2 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கக் கட்டியுடன் அந்தச் சிறுவன் மின்னல் வேகத்தில் மாயமானது தெரியவந்தது.

பதற்றமடைந்த சுஹாஷ் உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விஷயம் தெரிந்தவுடன் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். குற்றவாளி ஒரு சிறுவன் என்பதால், அவர் வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்குள் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் நடந்த ‘சேஸிங்’
தனிப்படை போலீசார் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சந்தேகப்படும்படி பதுங்கி இருந்த அந்தச் சிறுவனை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
சோதனையில் அச்சிறுவனிடம் இருந்த 1.5 கிலோ தங்கக் கட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன. திருடப்பட்ட 3 மணி நேரத்திற்குள்ளேயே ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை மீட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையை வணிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். பிடிபட்ட சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தொடரும் தங்க விலை உயர்வு: இந்தியாவில் 60% விற்பனை வீழ்ச்சி, 14 காரட் நகைகளுக்கு பெண்களின் விருப்பம்
