Pudukkottai Jallikattu Player Inbarasan Murder: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான முன்விரோதத்தில், இளம் ஜல்லிக்கட்டு வீரர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளது. “கைகள் இருந்தால்தானே காளையை அடக்குவாய்” எனக் கூறி அவரது இரண்டு கைகளையும் அந்தப் பயங்கரவாத கும்பல் வெட்டித் துண்டித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது வீரத்திற்கான விளையாட்டாகப் பார்க்கப்படும் நிலையில், அதில் ஏற்படும் போட்டிகளும் பொறாமைகளும் உயிரிழப்பு வரை கொண்டு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. ‘அன்பு பாய்ஸ்’ என்ற பெயரில் குழு அமைத்துச் செயல்பட்ட இளைஞர்கள், இந்தத் துரோகச் செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் போலீஸ் விசாரணை குறித்த விவரங்கள் இதோ.
Pudukkottai Jallikattu Player Inbarasan Murder: ஒன்றரை ஆண்டுப் பகை கொலையில் முடிந்த கதை!
புதுக்கோட்டை மாவட்டம் கீழவேப்பங்குடியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் இன்பரசன் (25), ஒரு சென்ட்ரிங் தொழிலாளி. இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதிலும், போட்டிகளில் காளைகளை அடக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (21), ரஞ்சித் (23) உள்ளிட்ட நண்பர்கள் ‘அன்பு பாய்ஸ்’ என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்துள்ளனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில், ‘அன்பு பாய்ஸ்’ குழுவின் காளையை இன்பரசன் வீரத்துடன் அடக்கியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்தப் புகைப்படத்தைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். இது அந்த இளைஞர்களுக்குப் பெரும் அவமானமாகத் தோன்றியுள்ளது. அன்று முதல் இன்பரசன் மீது அவர்கள் வன்மத்துடன் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே இன்பரசன் காளை பிடிப்பதை விட்டுவிட்டு, சொந்தமாக ஒரு காளையை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த காளை எந்த ஜல்லிக்கட்டிலும் பிடிபடாமல் வீரத்தைக் காட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்கள் இன்பரசனின் காளையைக் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாகப் போலீஸார் இரு தரப்பையும் அழைத்துச் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த நெருப்பு அணையாமல் இன்பரசனின் உயிரைப் பறிக்கும் வரை நீண்டுள்ளது.
ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்: கைகளைத் துண்டித்த ‘அன்பு பாய்ஸ்’ கோரம்!
நேற்று காலை அழகம்மாள்புரத்தில் சென்ட்ரிங் வேலைக்காக இன்பரசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இன்பரசனின் பைக் மீது மோதி அவரைக் கீழே தள்ளினர். ஆபத்தை உணர்ந்த இன்பரசன் தப்பி ஓட முயன்றார். ஆனால், அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று சுற்றி வளைத்தது.
“கைகள் இருந்தால்தானே நீ காளையை அடக்குவாய்” என்று கத்தியபடி, இன்பரசனின் இரண்டு கைகளையும் அவர்கள் கொடூரமாக வெட்டித் துண்டித்தனர். அதன் பிறகு உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த புதுக்கோட்டை டவுன் போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது விக்னேஷ், ரஞ்சித், ரோகேஷ், சீனு, திருமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வீரர்களிடையே நிலவும் இத்தகைய பகையால் ஒரு இளயுயூர் பறிபோனது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகனைக் காக்கப் போராடிய தாய் பலி: சேலத்தில் ரவுடி கும்பலின் வெறிச்செயல்!
மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமாக, சேலம் அஸ்தம்பட்டியில் தனது மகனை ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்ற 67 வயது தாய் சின்னபிள்ளை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது மகன் சின்னதம்பி ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். 2023-ல் நடந்த பரசுராமன் என்பவரது கொலைக்குப் பழிவாங்க, அவரது கூட்டாளிகளான சரவணக்குமார், பிரசன்னா உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் இரவு சின்னதம்பியின் வீட்டிற்குள் புகுந்தனர்.
ஆயுதங்களுடன் வந்த கும்பல் சின்னதம்பியை வெட்ட முயன்றபோது, அவரது தாய் சின்னபிள்ளை தடுத்துப் போராடினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் அந்த முதியவரைச் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ரவுடிகள் சரவணக்குமார் மற்றும் பிரசன்னாவை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.
