Rohit Sharma ODI Captaincy: கேப்டன் பதவியைப் பறித்து சுப்மன் கில்லுக்கு வழங்கியதால் வேதனையடைந்த ரோஹித் சர்மா! என்னை டார்கெட் செய்கிறீர்களா? பழிக்குப் பழி!
8 கிலோ குறைத்து சபதம்! ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி!
இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட்மேன்’ என்று அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா, கடந்த சில மாதங்களாகத் தனக்கு எதிராக வீசப்பட்ட விமர்சனங்கள், பதவி நீக்கம் மற்றும் ஓய்வு குறித்த ஊகங்களால் ஏற்பட்ட மன வேதனைக்கு, தனது பேட்டால் பதிலடி கொடுக்கத் தயாராகியுள்ளார்.
ஒருநாள் (ODI) கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் தனது உடற்தகுதியை நம்பமுடியாத அளவிற்கு மாற்றியிருப்பது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, தொடர்ச்சியான ஃபார்ம் இழப்பு, அதோடு உடற்தகுதி குறித்த சமூக வலைதளக் கிண்டல்கள் என அவர் ஒரு காயப்பட்ட சிங்கமாக ஓரங்கட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
பதவி நீக்கமும், உடற்தகுதி குறித்த விமர்சனங்களும்
சில மாதங்களுக்கு முன்புவரை, ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி குறித்து சமூக வலைதளங்களில் கேலிகளும், விமர்சனங்களும் உச்சத்தில் இருந்தன. முக்கியமாக, டெஸ்ட் தொடர்களில் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாதபோது, இந்த விவாதம் தீவிரமடைந்தது.
இந்தக் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக முடிவெடுத்தார். இது, அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், சமீபத்திய பெரும் அதிர்ச்சியாக, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, இளம் வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8 கிலோ குறைத்து ஆச்சரியப்படுத்திய ரோஹித்!
கேப்டன் பதவி பறிக்கப்பட்டவுடன், ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்ற பேச்சுகள் வலுப்பெற்றன. ஆனால், இந்த ஊகங்கள் அனைத்தையும் உடைக்கும் விதமாக அவரது சமீபத்திய மாற்றம் அமைந்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் தோன்றியபோது, அவரது தோற்றம் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. சுமார் 8 கிலோ எடையைக் குறைத்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த உடற்கட்டுடன், கூடுதல் புத்துணர்ச்சியுடன் அவர் காட்சியளித்தார்.
38 வயதில் அவர் எடுத்துள்ள இந்த அதிரடி உடல் மாற்றம், ஓய்வு குறித்த அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது வெறும் உடல் ரீதியான மாற்றம் மட்டுமல்ல; இது தன்மீதான விமர்சனங்களுக்கும், பதவி பறிப்பிற்கும் அவர் எடுத்துள்ள சபதமாகவே பார்க்கப்படுகிறது.
அஜித் அகர்கருக்கு சவால்விடும் ‘சைலண்ட் மெசேஜ்’
ரோஹித் ஷர்மாவின் நெருங்கிய வட்டாரங்கள், அவரது இந்த மாற்றத்தின் பின்னணியில் ஒரு அழுத்தமான செய்தி இருப்பதாகக் கூறுகின்றனர். அதாவது, கேப்டன் பதவியை சுப்மன் கில்லுக்குக் கொடுத்து தன்னை நிர்பந்திப்பதாக நினைக்கும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ-க்கு, ‘நான் இன்னும் சோர்வடையவில்லை, என் திறமை இன்னும் குறையவில்லை’ என்று சொல்லாமல் சொல்லும் ஒரு சவாலாக இது பார்க்கப்படுகிறது.
“கில்லுக்கு கேப்டன் பதவியைக் கொடுத்து, என்னை ஒரம் கட்டப் பார்க்கிறார்களா? என் உடற்தகுதியைக் குறிவைத்து டார்கெட் செய்கிறீர்களா?” என்ற மன வேதனையில்தான் ரோஹித் இந்த தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சய் பங்கர் சொல்லும் ரகசியம்
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ரோஹித்தின் இந்த திடீர் மாற்றத்திற்கான உளவியல் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டபோது ஏற்பட்ட அதே மன வலியின் வெளிப்பாடு என்று பங்கர் தெரிவித்துள்ளார்.
“கடைசியாக ரோஹித் ஷர்மா இவ்வளவு கடுமையான உடற்பயிற்சி முறையைப் பின்பற்றியது, 2011 உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகுதான். அந்த நீக்கம் அவரது மனதில் ஒரு ஆழமான, ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் அதே போன்றதொரு அசைக்க முடியாத மன உறுதியை அவரிடம் நான் காண்கிறேன்,” என்று சஞ்சய் பங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, 2011 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டபோது அவர் அனுபவித்த அதே தீவிரமான வேதனையை மீண்டும் அவருக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.
விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி!
சஞ்சய் பங்கர் மேலும் கூறுகையில், “உடற்தகுதி குறித்து எழுந்த விமர்சனங்கள் அவரை மீண்டும் காயப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன்தான் அவர் இவ்வளவு கடினமாக உழைத்துள்ளார்” என்றார்.

தனது விமர்சகர்களுக்கு அவர் ஆஸ்திரேலிய மண்ணில் பேட்டால் பதிலடி கொடுப்பார்,” என்றும் பங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித்தின் ராஜாங்கம்
ரோஹித் ஷர்மா தனது திறமையை மீண்டும் நிரூபிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் களம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர். புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, குறிப்பாக அவர்களது சொந்த மண்ணில், ரோஹித் ஒரு அசைக்க முடியாத சக்தியாகவே திகழ்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 46 போட்டிகளில் விளையாடி, 57.31 சராசரியுடன் 2407 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது ஆதிக்கம் இன்னும் அதிகம். அங்கு விளையாடிய 30 இன்னிங்ஸ்களில் 53.12 சராசரியுடன் 1328 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும்.
அவரது இந்த மிரட்டலான புள்ளிவிவரங்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் தொடரில் அவர் எவ்வளவு ரன்கள் குவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை இந்திய ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கேப்டன் பதவி நீக்கம், அவருக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.
