வரதட்சணை கொடுமை, ஒரு கோடி மேல் வரதட்சணை கொடுத்தும் கொடுமை.கணவர் வீட்டாரால் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவத்தால், ஜெபிலா என்ற இளம்பெண் தற்கொலை.
ரிதன்யாவின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் தமிழகம் முழுவதும் விலகாத நிலையில், ஒரே மாதிரியில் ஜெபிலா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா, திருமணமான இரண்டு மாதங்களிலேயே வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு முன் வெளியான ஆடியோ மெசேஜ் – “உடலும் உள்ளமும் வலிக்குது” என்ற பன்னிரண்டு சொற்கள், தமிழர் மனதில் இன்றும் பதிந்துகிடக்கின்றன. அந்த சோகத்திலிருந்து மக்கள் மீளாத நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த ஜெபிலா என்ற 26 வயது இளம்பெண், திருமணமாகி ஆறும் மாதங்களிலேயே, தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ரூ.1.5 கோடி அளவிலான வரதட்சணையுடன் குடும்பங்கள் சம்மதத்தில் திருமணம் நடந்து, சில மாதங்களில் தான் பெண் இவ்வாறு உயிரை மாய்க்க வேண்டிய நிலை ஏற்படுவது, வரதட்சணை என்ன ஒரு அபாயகரமான சமூக நோய் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
ஜெபிலா மேரி – கன்னியாகுமரியின் திக்கணங்கோடு அருகேயுள்ள செம்பிலாவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி நர்சிங் முடித்தவர். முட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர், இனையம் பகுதியைச் சேர்ந்த மரிய நிதின் ராஜ் என்பவருடன், பத்து ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை இருவரது பெற்றோரும் ஒப்புக் கொண்டு கடந்த ஜனவரி 8ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது ₹50 லட்சம் செலவில் மேல் மிடாலத்தில் ஒரு வீடு, 50 பவுன் நகை உள்ளிட்ட பல பொருள்கள் சீதனமாக கொடுக்கப்பட்டன. இது மட்டும் இல்லாமல் கூடுதலாக செலவாகியுள்ள பணத்தைச் சேர்த்தால் ₹1.5 கோடிக்கு மேல் செலவாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பின் மேல் மிடாலத்தில் உள்ள வீட்டில் தம்பதிகள் வசித்தனர். ஆனால், மரிய நிதின் ராஜ் எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஜெபிலாவின் நகைகள் அனைவரும் அடகு வைக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தமும், தொடர்ந்து பணம் கேட்டு நிகழ்ந்த கொடுமைகளும், ஜெபிலாவை மனதளவில் இடித்துவிட்டன.
அந்த நிலையில், ₹5 லட்சம் பணத்தை கேட்டு மீண்டும் வரதட்சணை துன்புறுத்தல் தொடர்ந்ததாக அவரது தாயார் கூறுகிறார். அந்த பணத்தை தர தனது தாலிசெயினை அடகு வைத்து மகளுக்காக பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ஆனாலும், அவ்வளவு பணத்தையும் கொடுத்த பிறகும், துன்புறுத்தல் தொடர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், ஜெபிலா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். கணவரும், அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தி அவரது தாயையும், உறவினர்களையும் விழுந்து விழுந்து அழும் நிலைக்கு கொண்டு வந்தது. “எனது மகளின் கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு திடமாக உள்ளதோடு, அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது” என்று தாய் புஷ்பலதா தெரிவித்துள்ளார்.
மரணத்தின் பின்புலத்தில் குற்றச்சாட்டு எழுந்ததால், மரிய நிதின் ராஜ், அவரது பெற்றோர் ஆகிய மூவரும் கருங்கல் போலீசாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். இந்த விசாரணையை ஏடிஎஸ்பி நேரடியாக மேற்கொண்டு வருகிறார். மரணத்தில் சந்தேகங்கள் அதிகமுள்ளதால், பிரேத பரிசோதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மரணம் குறித்து தெரிந்த மக்கள், மருத்துவமனை அருகே 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “இந்த துயரத்தை எத்தனை பேர் தாங்க முடியும்?” என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகின்றது.