விராட் கோலியை மீண்டும் வம்பிழுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! இந்திய கிரிக்கெட் உலகில் ‘சர்ச்சை நாயகன்’ என்று அழைக்கப்படும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மீண்டும் தனது அதிரடி விமர்சனங்களால் சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளார். இம்முறை அவர் நேரடியாக விராட் கோலியின் பெயர் சொல்லாவிட்டாலும், “டாப் ஆர்டரில் சதம் அடிப்பவர்கள் ஜாம்பவான்கள் அல்ல” என்று கூறியிருப்பது, ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டரில் ஆடி பல சதங்களை விளாசிய கோலியைத் தான் குறிவைக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடக்கத்திலிருந்தே விமர்சித்து வரும் மஞ்ச்ரேக்கர், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டின் சவால்கள் குறித்தே கேள்வி எழுப்பியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இன்றும் போராடி ரன் குவிக்கும் நிலையில், கோலி எளிதான வழியைத் தேர்வு செய்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மஞ்ச்ரேக்கர், “ஒருநாள் போட்டியில் முதல் மூன்று இடங்களில் களமிறங்குவது தான் உலகிலேயே மிகவும் சுலபமான வேலை” என்று கூறியுள்ளார். டெஸ்ட் போட்டியில் புதிய பந்தை எதிர்கொள்ளப் பயப்படுபவர்கள் கூட, ஒருநாள் போட்டியில் ஓப்பனிங் இறங்கத் துடிப்பார்கள் என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாதத்தின்படி, ஒருநாள் போட்டியின் முதல் 10 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தவே முயல்வார்கள் என்றும், ஸ்லிப் போன்ற திசைகளில் ஃபீல்டர்கள் இல்லாதது பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் சாதகம் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆரம்பத்திலேயே செட்டில் ஆகிவிடும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எளிதாகச் சதம் அடித்து விடுகிறார்கள் என்பது அவரது கருத்து.
இதற்கு மாறாக, மிடில் ஆர்டரில் அதாவது 4, 5 மற்றும் 6-வது இடங்களில் களமிறங்குபவர்களே உண்மையான சாதனையாளர்கள் என்று அவர் மகுடம் சூட்டியுள்ளார். எம்.எஸ். தோனி, யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரைனா ஆகியோரை இதற்கு உதாரணமாகக் காட்டிய மஞ்ச்ரேக்கர், நெருக்கடியான நேரங்களில் பந்துவீச்சாளர்களைச் சமாளித்து அணியை வெற்றி பெற வைப்பதே கடினமான காரியம் என்று புகழ்ந்துள்ளார்.
மஞ்ச்ரேக்கரின் இந்த ஒப்பீடு விராட் கோலி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை உலகின் தலைசிறந்த வீரர்கள் அனைவரும் டாப் ஆர்டரில் விளையாடித் தான் சாதனைகளைப் படைத்துள்ளனர் என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, “கோலி பெயரைச் சொன்னால் தான் மஞ்ச்ரேக்கருக்குச் சோறு கிடைக்கும்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மஞ்ச்ரேக்கர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல் மீண்டும் வம்பிழுத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட சதங்களை அடித்து உலக சாதனை படைத்துள்ள விராட் கோலியை, ஜாம்பவான் இல்லை என்று மஞ்ச்ரேக்கர் மறைமுகமாகக் கூறுவது அவரது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியா அல்லது கிரிக்கெட் ரீதியான பார்வையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், தோனி மற்றும் யுவராஜ் சிங் போன்ற மிடில் ஆர்டர் வீரர்களின் சிறப்புகளைக் கூறுவதற்காக, டாப் ஆர்டர் வீரர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவது முறையல்ல என்று மூத்த கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களைக் கடந்து சங்கக்காராவின் சாதனையை முறியடிக்க உள்ளார். இத்தகைய இக்கட்டான சூழலில் மஞ்ச்ரேக்கரின் இந்த விமர்சனம், கோலிக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்குமா அல்லது அவர் தனது பேட்டிங் மூலம் இதற்குப் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

