உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் நடப்பு பருவத்திலிருந்து பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி திடீரென விலகியுள்ளது.
கடந்த முறை பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்துவிட்ட நிலையில், தற்போது இந்த விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தொடரின் போது இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதோடு, அரையிறுதிப் போட்டியிலும் இந்திய அணி விளையாட மறுத்துவிட்டதால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த விவகாரத்தில் இந்திய அணியினர் தமக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இந்திய வீரர்கள் கலந்துகொள்வது குறித்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் WCL அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், அவர்களின் இந்த நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் தொடரின் அமைப்பாளர்கள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி இந்தத் தொடரிலிருந்து தாமாகவே வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், வெளிப்படையாக ஏற்படும் அவமானத்தைத் தவிர்க்கும் வகையில் தாங்கள் “எதிர்பாராத சூழ்நிலைகள்” காரணமாகவே விலகுவதாக WCL தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகக் களம் இறங்க மறுத்ததே இந்தத் தொடர் மோதல்களுக்கு முக்கியக் காரணமாகும்.
தற்போது பாகிஸ்தானின் இத்தகைய பிடிவாதமான போக்கும், அதன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதும் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

