Mohsin Naqvi Warning: பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது ஓராண்டு தடை விதிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் தொடர்கள் ஒரே காலகட்டத்தில் நடைபெறவுள்ளன. இதனால் வருமானம் மற்றும் புகழுக்காகப் பல வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் லீக்கைத் தவிர்த்துவிட்டு இந்தியாவில் விளையாட ஆர்வம் காட்டி வருவது பாகிஸ்தான் வாரியத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இலங்கை அணியின் அதிரடி வீரர் தசுன் ஷனகா லாகூர் கலந்தர்ஸ் அணியிலிருந்து விலகி, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கரணுக்குப் பதிலாக இணைந்துள்ளார். இவர் கடந்த 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் போலவே ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானியும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக இணைந்துள்ளார். இது போன்ற தொடர் வெளியேற்றங்கள் பிசிபி-யை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இது குறித்து ஆவேசமாகப் பேசிய மோஷின் நக்வி, “விதிமுறைகளின்படி இந்த வீரர்கள் மீது நாங்கள் நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை எடுப்போம். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்ற கார்பின் போஷிற்கு ஒரு வருடத் தடை விதித்தது போலவே, இந்த முறையும் தடை உறுதி” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஐபிஎல் தொடருடன் தேதிகள் மோதுவது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. சில வீரர்கள் அங்கு சென்றாலும், பல தலைசிறந்த வீரர்கள் எங்களுக்கும் ஆட வருகிறார்கள். வேறு வழியில்லாமல் தான் மார்ச் மாதத்தில் இந்தத் தொடரை நடத்துகிறோம்” என்று விளக்கமளித்தார்.
இவர்களைத் தவிர குடகேஷ் மோட்டி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்று கூறி பிஎஸ்எல் தொடரிலிருந்து நழுவியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் அணிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் மார்ச் 26 அன்றும், ஐபிஎல் மார்ச் 28 அன்றும் தொடங்கவுள்ள நிலையில், வீரர்களின் இந்தத் தேர்வு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தரத்தை உலக அரங்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது. பண பலம் கொண்ட ஐபிஎல்-லை எதிர்க்க முடியாமல் பாகிஸ்தான் வாரியம் திணறி வருகிறது.
தடை எச்சரிக்கை விடுத்தாலும், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானை விட இந்தியாவையே தங்களது விருப்பமான இடமாகத் தேர்வு செய்து வருகின்றனர். இது வரும் காலங்களில் பிஎஸ்எல் தொடரின் வர்த்தக ரீதியான வெற்றியையும் பாதிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மோஷின் நக்வியின் இந்தத் தடை மிரட்டல் சர்வதேச வீரர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும். எனினும், ஐபிஎல்-லின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் எடுபடுமா என்பது சந்தேகமே.

