Nainar Nagendran criticizes CM Vijay: தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிய புயல் ஒன்று கிளம்பியுள்ளது. சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ தாயகம் திரும்பியதற்கும், தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்ததற்கும் தமிழக முதல்வர் விஜய் எந்தவொரு வாழ்த்தும் கூறாதது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, “உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா?” எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் நோக்கி மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களின் இந்த அரசியல் மோதல் சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா ஜோசப் விஜய்? என நேரடியாக முதல்வரின் பெயரை குறிப்பிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பத்ம விருதுகளுக்கு வாழ்த்தாதது ஏன்? நயினார் கேள்வி
அவர் தனது பதிவில், “நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் தமிழக முதல்வர் இன்னும் மௌனம் காப்பது ஏன்?” எனக் கேட்டுள்ளார்.
மேலும், “விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த உண்மையான உழைப்பாளிகளான தமிழர்கள்” என்றும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர்களின் இந்த மாபெரும் வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது?” என்றும் அவர் சாடியுள்ளார்.

Nainar Nagendran criticizes CM Vijay: முதல்வர் மீது சாடல்
“பின்பு எதற்கு இந்த கனத்த மவுனம்? நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை. நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை” என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
“உங்களைத் தோள் வலிக்க தாங்கிப் பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை” எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் மிக ஆக்ரோஷமாக முடித்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் சாதனைகள் மற்றும் தமிழகத்தின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து மௌனம் காப்பதாக பாஜக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு வினையானது! கரூரில் கார் கவருக்குள் சிக்கி 4 வயது சிறுவன் துடிதுடிக்கப் பலி!

