Vaibhav Suryavanshi IPL 2026 Record: ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைக்கும் ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இந்த வாழ்வா சாவா போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியின் உச்சத்தைக் காட்டி மிரட்டியுள்ளார்.
மைதானத்திற்கு வந்த முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட வைபவ், ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களிலேயே வெறும் 10 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ரசிகர்களை மிரள வைத்தார். இந்த அசுரத்தனமான ஆட்டத்தின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களைக் கடந்த வைபவ், கிரிக்கெட் வரலாற்றில் பல பிரம்மாண்ட சாதனைகளைத் தன்வசமாக்கியுள்ளார்.
ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் சாதனைகள் காலி!
ஐபிஎல் வரலாற்றிலேயே 600 ரன்களை மிக இளம் வயதில் எட்டிய முதல் வீரர் என்ற பிரம்மாண்ட பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் மிக இளம் வயதில் 600 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது.
அந்தச் சாதனையைத் தற்போது வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அசால்ட்டாக முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, பதின் பருவ வயதில் (Teenager) ஒரு டி20 தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற தேவ்தத் படிக்கல்லின் (580 ரன்கள்) வரலாற்றுச் சாதனையையும் அவர் தவிடுபொடியாக்கியுள்ளார்.
Vaibhav Suryavanshi IPL 2026 Record: கிறிஸ் கெயிலின் 14 ஆண்டுகால அசுர சாதனை தகர்ப்பு!
மிக முக்கியமாக, ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர் அடித்த ‘சிக்சர் கிங்’ கிறிஸ் கெயிலின் 14 ஆண்டுகால சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள வைபவ், 65 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள்:
வைபவ் சூர்யவன்ஷி – 65 சிக்ஸர்கள் (2026)
கிறிஸ் கெயில் – 59 சிக்ஸர்கள் (2012)
ஆண்ட்ரே ரசல் – 52 சிக்ஸர்கள் (2019)
கிறிஸ் கெயில் – 51 சிக்ஸர்கள் (2013)

சுரேஷ் ரெய்னாவின் பிளே-ஆஃப் சாதனையை சமன் செய்த வைபவ்
இப்போட்டியில் வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ் சூர்யவன்ஷி, சென்னை அணியின் முன்னாள் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னாவின் 12 வருட வரலாற்று சாதனை ஒன்றையும் சமன் செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
அதுவே ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக நீடித்தது. அந்த சாதனையை தற்போது வைபவ் சூர்யவன்ஷி சமன் செய்துள்ளார். தனது 15 வயதிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைச் சிதறடித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் வருங்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

