விமானத்தில் இணை விமானியால் தாக்கப்பட்ட போதிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் அவர்களை, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் நேரில் சந்தித்துப் பாராட்டிய சம்பவம் உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்குப் பறந்து கொண்டிருந்த ‘ஃபிளைதுபாய்’ விமானத்தின் கேப்டனாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் பணியாற்றினார். அவருடன் ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்ஹம்மாமி என்பவர் இணை விமானியாகச் செயல்பட்டார்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இணை விமானி ஹமாம் திடீரென வெறித்தனமாக மாறி, விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கில், கோடரியால் கேப்டன் ஸ்மித் மச்சாரை சரமாரியாகத் தாக்கினான்.
இருவருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலால், விமானம் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான அடிகள் கீழ்நோக்கிச் சரிந்து, பெரும் அசம்பாவிதத்தை எதிர்நோக்கியது. பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தபோதிலும், மனஉறுதியை விடாத கேப்டன் ஸ்மித் மச்சார், கொஞ்சமும் யோசிக்காமல் காக்பிட் கதவைத் திறந்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
உடனடியாக உள்ளே பாய்ந்த பயணிகள், தாக்குதல் நடத்திய இணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். அதன்பின், விமானத்திலிருந்த ஓய்வில் இருந்த பிற விமானிகளின் உதவியுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. ஸ்மித்தின் இந்த சாதுரியத்தால் 174 பயணிகளின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது.

தற்போது துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹீரோ ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்து, அவரைக் கட்டிப்பிடித்துத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இளவரசர், “எங்கள் நாட்டின் தலைமை மற்றும் மக்கள் சார்பில் அவருக்குச் சிரம்தாழ்ந்த பாராட்டுக்கள்! அவர் எங்கள் நாட்டின் கதையிலும், ஐக்கிய அரபு அமீரகம் உயர்த்திப் பிடிக்கும் அமைதி மற்றும் கருணையிலும் ஒரு அங்கமாகத் திகழ்கிறார். அவரைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இந்த இந்திய வீரரின் தாராள மனப்பான்மையையும் துணிச்சலையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையே, தாக்குதல் நடத்திய இணை விமானி ஹமாம் அல்ஹம்மாமி, தீவிரவாதக் கொள்கைகளால் ஏற்கெனவே ஓமனில் விமானம் ஓட்டத் தடை செய்யப்பட்டவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதச் சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

