தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கள் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
திருமாவளவன் மற்றும் வைகோ போன்ற ஆளுமைகளை எவராலும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், சில தரப்பினர் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் சோஃபா அனுப்புவது குறித்துப் பேசி வருவதாகச் சாடினார்.
ஐ.யு.எம்.எல் போன்ற கட்சிகள் கடந்த பல தசாப்தங்களாகக் குறிப்பிட்ட சில குடும்பங்களின் ஆதிக்கத்தின் கீழ் மட்டுமே அமைச்சரவைப்பதவிகளை அனுபவித்து வந்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த வன்னி அரசு போன்ற தலைவர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதில் என்ன தவறு என்ற கேள்சியை எழுப்பிய அவர், இது வம்ச அரசியலுக்கான களம் அல்ல என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாவிட்டால் தற்போதைய முக்கியத் தலைவர்களால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும், குறிப்பாகச் சேப்பாக்கத்தில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் போன்ற கட்சிகளின் பலம் இல்லாவிட்டால் டெபாசிட் கூடக் கிடைத்திருக்காது என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

முதல்வர் குறிஞ்சி மாளிகையை வழங்கியிருந்தாலும், அங்கு அமர்வதற்கான சூழ்நிலையைத் தங்களது வியூகங்கள் மூலமே கூட்டணிக் கட்சிகள் உருவாக்கிக் கொடுத்தன என்று அவர் வெளிப்படையாகப் பேசினார்.
அரசியல் களத்தில் தொடர்ச்சியாக விவாதங்களை ஏற்படுத்தி வரும் இத்தகைய அதிரடிப் பேச்சுக்கள், தவெக கூட்டணியின் தேர்தல் வியூகங்களை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
எதிர்க்கட்சிகளின் பலவீனங்களையும் கடந்த கால அரசியல் போக்குகளையும் புட்டுப் புட்டு வைத்துள்ள அமைச்சரின் இந்தப் பிரசாரம், தற்போதைய இடைத்தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது.

