உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் சாஹிபாபாத் பகுதியில் உள்ள குல்மோஹர் அபார்ட்மெண்ட்டில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த ரிதிஷா என்ற சிறுமி, கட்டடத்தின் 10-ஆவது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி ரிதிஷா கணிதப் பாடத்தில் சற்று பலவீனமாக இருந்ததால், அவரது பள்ளி ஆசிரியை அவரைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஆசிரியை அளித்த தொல்லைகள் மற்றும் அவமானங்கள் குறித்து அந்தச் சிறுமி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுமியின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

