சொந்தப் பிள்ளையைப் போல ஆசையாக வளர்த்து ஆளாக்கிய தத்தெடுக்கப்பட்ட மகனும், மருமகளும் சேர்ந்து தங்களை வீட்டை விட்டு விரட்டியடித்ததாக முதிய தம்பதியினர் கண்ணீருடன் கதறும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இந்த முதிய தம்பதி, 75 லட்ச ரூபாய் செலவில் கட்டிய வீட்டை அவர்களின் மகன் வெறும் 46 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டுத் தங்களை வீடற்றவர்களாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெற்ற பிள்ளையைப் போலவே எண்ணி வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய மகன் இப்படித் துரோகம் செய்வான் என்று அந்தத் தம்பதியினர் கனவிலும் நினைக்கவில்லை. மகனும் மருமகளும் செய்த கொடுமையால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இந்த முதிய தம்பதியினர், தற்போது வேறு வழியின்றி முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்து வசித்து வருகின்றனர்.
தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முதிய தம்பதியினர் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு உதவி கேட்டு வருகின்றனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டு கண்ணீர் வடித்தும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ‘sarcastic_engineerr’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இவர்களின் வீடியோ, லட்சக்கணக்கான மக்களின் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
75 லட்ச ரூபாய் வீட்டை 46 லட்சத்திற்கு விற்றுவிட்டு, இன்று ஒரு ஒரு பைசாவுக்கும் தங்களை நடுத்தெருவில் அலையவிட்டுவிட்டதாக அந்த முதிய தம்பதியினர் கண்ணீர்மல்கக் கூறியது பார்ப்போரின் நெஞ்சைக் கலங்க வைத்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த மகனின் செயலைக் கடுமையாகக் கண்டித்துத் தங்களது கோபத்தைப் பதிவிட்டு வருகின்றனர். “இப்படிப்பட்ட கொடூரமான பிள்ளையை கடவுள் யாருக்கும் கொடுக்கக் கூடாது” என்றும், “பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்ப்பதை விடத் தங்கள் வாழ்நாளில் சந்தோஷமாக வாழ்ந்து முடிப்பதே மேல்” என்றும் இணையவாசிகள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

