பெங்களூரில் ரேபிடோ பைக் புக் செய்த பெண் ஒருவரைச் சாலையில் அப்படியே விட்டுவிட்டு, அவர் பைக்கில் ஏறினாரா என்று கூடப் பார்க்காமல் டிரைவர் தனியாகவே பைக்கை ஓட்டிச் சென்ற நகைச்சுவையான சம்பவம் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தான் ரேபிடோ பைக் புக் செய்ததாகவும், டிரைவர் வந்தவுடன் அவரிடம் பின் நம்பரைச் சொல்லிவிட்டு ஹெல்மெட்டையும் மாட்டிக்கொண்டு பைக்கில் ஏறப் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் பைக்கில் ஏறுவதற்குள் அந்த டிரைவர் ரைடை ஸ்டார்ட் செய்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். “தம்பி.. நான் இன்னும் பைக்கிலேயே ஏறலடா!” என்று சொல்லக்கூட முடியாமல் அந்தப் பெண் ரோட்டிலேயே திகைத்துப்போய் நின்றுகொண்டிருந்தார்.

அதைவிடக் கூத்து என்னவென்றால், பின்னாடி ஆள் உட்கார்ந்திருக்காங்களா இல்லையான்னு கூடப் பார்க்காமல், அந்த டிரைவர் தொடர்ந்து 10 நிமிஷத்துக்கும் மேலாக தனியாகவே பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். “ஒருத்தர் எப்படிங்க பின்னாடி ஆள் இல்லாததையே மறந்துட்டு வண்டி ஓட்டுவாரு?” என்று அந்தப் பெண் ஜாலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வித்தியாசமான பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், “டிரைவருக்கு உங்களை விட அவசரம் போல!”, “தவறை உணர்ந்த டிரைவர் திரும்ப வர வெட்கப்பட்டு இமயமலைக்குச் சாமியாராகப் போயிருப்பார்” என்றெல்லாம் கலாய்த்து கமெண்ட் அடித்து இணையத்தை ரகளையாக்கி வருகின்றனர்.

